அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் மொசூலில் ஐ.எஸ். இயக்க தலைவர்கள் 3 பேர் பலி
ஈராக்கில் மொசூல் நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்பதற்காக ஈராக் படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டையில், ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி, ஈராக் படைகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன.
மொசூல் நகரின் கிழக்கு பகுதிகள் கடந்த ஜனவரி மாதம் ஈராக் படைகள் வசம் வந்து விட்டன. மேற்கு பகுதிகளையும் தங்கள் வசப்படுத்துவதற்காக ஐ.எஸ். இயக்கத்தினரை எதிர்த்து ஈராக் படைகள் உக்கிரமான சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிக்கி ஐ.எஸ். இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் 3 பேர் பலியாகினர். இது தொடர்பாக ஈராக் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதில், “மேற்கு மொசூலில் அல் டெங்க் பகுதியில் அமைந்திருந்த ஐ.எஸ். இயக்கத்தினரின் தலைமையகத்தை அமெரிக்க கூட்டுப்படைகள் நிர்மூலம் ஆக்கின. துல்லியமான உளவுத்தகவலின் அடிப்படையில் அங்கு வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ். இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் வியலாத் நினிவா அகமது மாசன், இப்ராகிம் அல் ஷாபி, முகமது அப்தெல் ரகுமான் ஆகிய 3 பேரும் கொல்லப்பட்டனர்” என கூறப்பட்டுள்ளது.