தென்மாநிலங்களில் லாரி ஸ்டிரைக்: 30 லட்சம் லாரிகள் ஓடாது
இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியது உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (மார்ச் 30) முதல் லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரூ.10 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் அடைந்து உள்ளன.
துவங்கியது ஸ்டிரைக் :
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களைச் சேர்ந்த 30 லட்சம் லாரிகள் இயக்கப்படுவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக, லாரிகளில் சரக்கு புக்கிங் செய்வதும் நேற்றுமுன்தினம் முதல் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், லாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘சரக்கு புக்கிங்’ நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5,643 லாரி புக்கிங் ஏஜெண்டு நிறுவனங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
‘சரக்கு புக்கிங்’ நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதன் மூலம் லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்குபவர்கள் என ஏராளமான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். லாரி ஸ்டிரைக் தொடர்பாக இன்று பிற்பகலில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.