‛நிசார்’ செயற்கோள் தயாரிக்கும் பணி; நாசாவுடன் கைகோர்க்கும் இஸ்ரோ
வேளாண்துறை, கால நிலை மாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக, நாசாவுடன் இணைந்து ‛நிசார்’ எனும் நுண்துளை ரேடார் செயற்கைக் கோள் ஒன்றை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
கண்காணிக்கும் பணி:
இரட்டை அலைவரிசை கொண்ட நிசார் எனும் நுண்துளை ரேடார் செயற்கைக் கோளை, நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கி வருகிறது. இந்த செயற்கைகோளானது, இயற்கை வளங்களை கண்காணித்தல், வேளாண்துறையில் மண்ணின் ஈரப்பதம் அறிதல், வெள்ள இடர்பாட்டை முன்கூட்டியே அறிதல், கடலரிப்பு, கடலோர மாற்றங்கள், மாறிவரும் காற்று மற்றும் கடல் நீரோட்டம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிக்கு உதவும்.
தடுப்பு நடவடிக்கை:
பனிப்பாறைகள், பனிச்சரிவு அபாயத்தைக் கண்டறியவும், கால நிலை மாற்றங்கள் குறித்த விவரங்களை பூமிக்கு தகவல் அனுப்பும் பணியையும் இந்த செயற்கைக் கோள் மேற்கொள்ளும். நிசார் விடுக்கும் எச்சரிக்கைகள் மூலம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏராளமான மனித உயிர்களைக் காக்க முடியும் என நம்பப்படுகிறது.