புதைகுழியில் சிக்கிய 11 யானைகள் 3 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்பு
கம்போடியாவின் கிழக்குப் பகுதியில் புகழ்பெற்ற கியோ செய்மா வனவிலங்குகள் சரணால யம் உள்ளது. வியட்நாம் போரின் போது இந்த சரணாலயத்தின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதன் காரணமாக ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு தற்போது அவை புதைகுழிகளாக மாறியுள்ளன.
கடந்த 24-ம் தேதி 3 குட்டி யானை களும் 8 பெரிய யானைகளும் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு புதை குழியில் இறங்கியுள்ளன. அவை சகதியில் சிக்கிக் கொண்டன. ஒரு நாள் கழித்து கிராம மக்கள், யானைகள் சிக்கித் தவிப்பதைப் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைய மேலும் ஒருநாளாகி விட்டது.
சுமார் 10 அடி ஆழமுள்ள புதை குழியில் யானைகள் சிக்கி யிருந்தன. மீட்புக் குழுவினர் புதை குழியின் ஒரு முனையை தோண்டி சாய்வு தளத்தை ஏற்படுத்தினர். பின்னர் சகதியில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்த புதை குழியில் தண்ணீரைப் பாய்ச்சினர்.
இதைத் தொடர்ந்து சகதியில் இருந்து விடுபட்ட யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக சாய்வுதளம் வழியாக மேலே ஏறின. மூன்று நாட்களுக்குப் பிறகு 11 யானைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக கம்போடிய வனத்துறை தெரிவித்துள்ளது.