வகைவகையா வடாம், வற்றல், ஊறுகாய்: காய்கறி ஊறுகாய்
கோடைக்காலம் வருவதற்கு முன்பே வெயிலை நினைத்து பலரும் எரிச்சல்படுவார்கள். ஆனால், அனலாகக் காய்கிற வெயில்தான் வற்றல், வடாம், ஊறுகாய் போன்றவற்றைப் பதப்படுத்த உகந்தது. “அதனால் நாங்கள் எப்போதும் வெயிலை மகிழ்ச்சியோடு வரவேற்போம். மாங்காய், நாரத்தை, எலுமிச்சை ஆகியவற்றில் மட்டும்தான் ஊறுகாய் போட வேண்டும் என்பதில்லை. காய்கறிகளில்கூட ஊறுகாய் தயாரிக்கலாம். சில நாட்கள் சிரமப்பட்டு வற்றல், ஊறுகாய் வகைகளைச் செய்துவைத்துக் கொண்டால் வருடம் முழுக்கக் கவலையில்லாமல் இருக்கலாம்” என்று சொல்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். எளிய முறையில் செய்யக்கூடிய வற்றல், வடாம், ஊறுகாய் ஆகியவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் இவர்.
காய்கறி ஊறுகாய்
என்னென்ன தேவை?
கேரட் – 1
பூண்டு – 1 பல்
இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன்
சதுரமாக வெட்டிய மாங்காய் – 2 டீஸ்பூன்
பட்டாணி – கால் கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – கால் கப்
வெங்காயம் – 1
கடுகு, வெந்தயம் – தலா 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
வினிகர் – 3 டீஸ்பூன்
எலுமிச்சை – 2
தனியா – 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெந்தயம், தனியா, கடுகு ஆகியவற்றைக் குறைந்த தணலில் தனித் தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டை வதக்கிக்கொள்ளுங்கள். அதன்பின் அரைத்த பொடி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து அந்தக் கலவையை நறுக்கிவைத்துள்ள காய்கறிக் கலவையில் கொட்டி, கலக்குங்கள். இதை உலர்ந்த பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு நன்றாகக் குலுக்குங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாறு, வினிகர், கடுகு எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து இரண்டு, மூன்று நாட்கள் அப்படியே வையுங்கள். காய்கறிகள் நன்றாக ஊறிய பிறகு பயன்படுத்துங்கள். இந்த ஊறுகாய் இருபது நாட்கள் வரை கெடாது. காலிஃபிளவர், பாகற்காய், தக்காளி என விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.