வகைவகையா வடாம், வற்றல், ஊறுகாய்: தாளிப்பு வடகம்
என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் – கால் கிலோ
சீரகம் – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து
– தலா 50 கிராம்
மஞ்சள் தூள் – சிறிதளவு
விளக்கெண்ணெய் – கால் கப்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெந்தயப் பொடி – 1 டீஸ்பூன்
பூண்டு – 15 பல்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கி, அரைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதனுடன் சீரகம், மஞ்சள் தூள், கடுகு, உப்பு, வெந்தயப் பொடி, நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பிறகு கறிவேப்பிலை, விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசையுங்கள். துவரம் பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைமணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பருப்பை நன்றாக உடைத்து வெங்காயக் கலவையுடன் நன்றாகக் கலந்து, மூன்று நாட்கள் ஊறவிடுங்கள். நான்காவது நாள் கலவை நன்றாக ஊறியிருக்கும்.
அதைப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுத்துவையுங்கள். இது நீண்ட நாட்கள் கெடாது. புளிக் குழம்பு, பொரித்த குழம்பு, சாம்பார், வெந்தயக் குழம்பு ஆகியவற்றைச் செய்யும்போது, தாளிப்புப் பொருட்களுக்குப் பதிலாக இந்த வடகத்தை உதிர்த்துப் போட்டுத் தாளித்து குழம்பின் ருசி ஆளை அசத்தும்.