ஐபிஎல் டி20 திருவிழா 5-ம் தேதி தொடக்கம்: காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விலகுவதால் அணி உரிமையாளர்கள் கலக்கம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் போட்டிகள் வரும் 5-ம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது. 5-ம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
பெரிய அளவிலான இந்த கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அணிகளில் உள்ள முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். இதனால் அந்த அணிகளின் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் குடலிறக்கம் காரணமாக இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் அவர் புனே அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணி இந்த சீசனில் தோனிக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்க உள்ள நிலையில் அஸ்வின் விலகி இருப்பது சற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்திய அணியின் தொடக்க வீரராகவும் கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்ட முரளி விஜய் தோள்பட்டை மற்றும் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெற உள்ளதால் இம்முறை ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் பெங்களூரு அணியை வழிநடத்தி வந்தார். தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் தற்போது பிசிசிஐ-யின் மருத்துவ மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
தொடர் சிகிச்சையில் உள்ள அவரது உடல் நிலை குறித்து ஏப்பரல் 2-வது வாரத்தில்தான் தெரிய வரும். அந்த சமயத்தில் கோலி முழு உடல் தகுதியை நிருபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட முடியும் என்ற நிலைமை உள்ளது.
பெங்களூரு அணிக்காக விளை யாடி வந்த கே.எல்.ராகுல் தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள லண்டன் செல்ல முடிவு செய்துள்ளார். அவர் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதற்கிடையே அந்த அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்சும் இந்த தொடரில் இருந்து விலகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் அளவிலான 50 ஓவர் கிரிக்கெட்டில் முதுகுவலி காரணமாக டிவில்லியர்ஸ் களமிறங்கவில்லை. ஏற்கெனவே கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடாத நிலையில் தற்போது டிவில்லியர்ஸின் காயத்தால் பெங்களூரு அணி நிர்வாகம் மிகுந்த கவலையடைந்துள்ளது.
ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, வேகப் பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தெரிவிக் கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவுக்கு இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் லேசான வலி இருப்பதாகவும், ஜடேஜாவுக்கு பந்தை சுழற்றும் விரல் பகுதியில் வலி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தொடர்ச்சி யாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதாலேயே இந்த வலி ஏற்பட்டுள்ளது என்றும் இருவார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என பிசிசிஐ மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஜடேஜா குஜராத் அணிக்காகவும், உமேஷ் யாதவ் கொல்கத்தா அணிக் காகவும் கடந்த சீசனில் விளையாடி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்திய அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் முழு உடல் தகுதியை பெற்றுள்ளனர். இவர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட உள்ளனர்.
ரோஹித் சர்மா கடந்த ஆண்டு அக்டோபரில் நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது தொடை பகுதி யில் காயம் அடைந்தார். இதற்காக லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரோஹித் சர்மா சுமார் 5 மாதகால இடைவேளைக்கு பிறகு தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்திய வீரர்களை போன்று வெளிநாட்டு வீரர்களும் பலர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர். ஏலம் நடைபெறுவதற்கு முன்பே கெவின் பீட்டர்சன் விலகினார். கடந்த சீசனில் புனே அணிக்காக விளையாடிய அவர் 4 ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்ற நிலையில் காயம் காரணமாக விலகினார். தற்போது அதிக பளு காரணமாக விலகுவதாக தெரிவித்திருந்தார்.
டெல்லி அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்களான டுமினி, குயிண்டன் டி காக் ஆகியோரும் இந்த சீசனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் டுமினி சொந்த காரணங்களுக்காக விலகி உள்ளார். அதேவேளையில் டி காக் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
இதேபோல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் மார்ஷ், ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். மார்ஷ் புனே அணிக்காகவும், ஸ்டார்க் பெங்களூரு அணிக்காகவும் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த மேத்யூஸ், நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் ஆகியோரும் காயம் காரணமாக முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக் காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் இம்முறை ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது. தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருவரும் அவருக்கு இம்முறை ஐபிஎல் தொட ரில் பங்கேற்பதற்கான அனுமதியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இதுவரை வழங்கவில்லை.