கை கொடுக்குமா பிரேமலதா பிரசாரம்?
ஆர்.கே.நகரில், பிரேமலதா பிரசாரம் கை கொடுக்குமா என்ற கவலையில், தே.மு.தி.க.,வினர் உள்ளனர். தே.மு.தி.க.,வில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு, எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும், அவர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார். பிரசாரம், பொதுக் கூட்டம் என, அவர் பேசி வருகிறார்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தல், ௨௦௧௬ சட்டசபை தேர்தலில், கூட்டணி முடிவெடுப்பதில், பிரேமலதாவின் விருப்பமே இறுதியாக அமைந்தது. அவரின் தவறான கூட்டணி முடிவால் தான், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததாக, அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதை காரணம் காட்டி, முக்கிய நிர்வாகிகள் பலரும், அ.தி.மு.க., – தி.மு.க.,விற்கு தாவி விட்டனர்.
கடந்த தேர்தல்களில், விஜயகாந்திற்கு இணையாக, பிரேமலதாவும், தீவிர பிரசாரம் செய்துள்ளார். ஆனாலும், தே.மு.தி.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்தது தான் மிச்சம். இந்த சூழலில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக, அக்கட்சியினர் இதை கருதுகின்றனர். அதே நேரத்தில், சிறுநீரக பிரச்னையால், விஜயகாந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பெற்று வருகிறார். இதனால், ஆர்.கே.நகரில், விஜய காந்த் பிரசாரம் செய்வதில், சிக்கல் நீடித்து வருகிறது. அதே நேரத்தில், இன்று முதல், 9ம் தேதி வரை, பிரேம லதா பிரசாரம் செய்ய இருப்பதாக
அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜயகாந்த் களமிறங்காத நிலையில், பிரேமலதா பிரசாரம், இந்த முறையாவது கட்சிக்கு கை கொடுக்குமா அல்லது கடந்த தேர்தல்களை போலவே கவிழ்த்து விடுமா என்ற கவலையில், அக்கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.