பசுக்களை கொன்றால் தூக்கு சத்தீஸ்கர் முதல்வர் எச்சரிக்கை
பசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை, கடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், பஸ்தரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை சூழ்ந்த நிருபர்கள், பசு வதையை தடுக்க குஜராத்தை போன்று சத்தீஸ்கர் அரசும் சட்டத் திருத்தம் கொண்டு வருமா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ரமண் சிங், கடந்த 15 ஆண்டுகளில் ஒரு பசு கூட கொல்லப்படவில்லை. சத்தீஸ்கரில் பசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படு வார்கள் என்று தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய சட்ட விதிகளின்படி பசுக்களை கொன்றால் 7 ஆண்டு கள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் ரமண் சிங் எச்சரிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் சட்ட விரோத இறைச்சி கூடங்களுக்கு எதிராக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதேபோல பாஜக ஆளும் ஹரியாணா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பசுவதையை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.