பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்களில் பெரும்பாலான மக்கள் நவீன உலகத்திற்கு வந்து விட்டாலும் ஒரு சில பழங்குடிகள் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவதை விட்டுவிட்டனர். ஆனால் இவர்களின் மூதாதையர்கள் உணவிற்காக வேட்டையாடி வந்தனர். அவர்கள் வேட்டையாடவும், சமைக்கவும் இயற்கை சார்ந்த பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்ததுள்ளனர். இந்த பொருட்கள் பெரும்பாலான பழங்குடியின மக்களின் வீடுகளில் தற்போது பார்க்க முடியுமா என்பது கேள்வி குறியே.
ஆனால் ஊட்டி அருகேயுள்ள எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் இது போன்ற பொருட்களை நாம் பார்க்க முடியும். இந்த ஆராய்ச்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகையான பழங்குடியினர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசை கருவிகள், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல்லால் ஆன அம்பு, வில், கோடாரிகள் உள்ளன. மேலும் சமையலுக்காக பயன்படுத்திய மண் பாண்டங்கள், கற்களால் ஆன பாண்டங்களும் வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அவர்கள் குடியிருப்புக்களுக்காக பயன்படுத்திய பொருட்கள், கலை நயம் மிக்க விளையாட்டு பொருட்கள், போர் கருவிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களின் கலை நயம் மிக்க பாரம்பரிய பொருட்கள் மட்டுமின்றி, அந்தமான் நீக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இது தவிர ஒவ்வொரு பழங்குடியின மக்களும் 200 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் வாழ்வதற்காக பயன்படுத்திய குடியிருப்புக்களின் மாதிரிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இவைகளை காண பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளும் செல்லலாம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இனி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எம்.பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று தமிழகம் மற்றும் அந்தமான நிகோபார் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் மூதாதையர்கள் பயன்படுத்திய பல அரிய வகை கலை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை காணலாம்.