மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பெடரர், நடால்: சானியா மிர்சா ஜோடி அசத்தல்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால் மோதுகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 12-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசை எதிர்த்து விளையாடினார்.
இதில் பெடரர் 7-6 (11-9), 6-7 (9-11), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு அரை இறுதியில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-1, 7-5 என்ற நேர் செட்டில் இத்தாலியின் பேபியோ போக்னியை வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 25 நிமிடங்களில் முடிவடைந்தது.
கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் பெடரர் – நடால் பலப்ரீட்சை நடத்துகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இவர்கள் நேருக்கு நேர் சந்திப்பது இது 3-வது முறையாகும். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நடாலை வீழ்த்தி பெடரர் பட்டம் வென்றிருந்தார்.
அதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிஎன்பி பரிபாஸ் தொடரின் 4-வது சுற்றில் நடாலுக்கு எதிராக பெடரர் வெற்றியை பதிவு செய்திருந்தார். இதனால் இம்முறை நடைபெற உள்ள இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையக்கூடும்.
மியாமி ஓபனில் 5-வது முறையாக பங்கேற்றுள்ள நடால் இதுவரை பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பெடரரும், நடாலும் நேருக்கு நேர் 36 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 23 முறையும், பெடரர் 13 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.
மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி 6-7(6), 6-1, 10-4 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், சீன தைபேவின் ஷான் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சானியா ஜோடி, கனடாவின் கேபரியலா டப்ரோவ்ஸ்கி, சீனாவின் யபான் ஜோடியுடன் மோதுகிறது.