ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை: நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அசாமுக்கு அரசு அலுவல் காரணமாக வெள்ளிக்கிழமை சென்றார். அதற்கு முன்னதாக ‘நிதி மசோதா -2017’-வுக்கு ஒப்புதல் அளித்தார்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து நிதி மசோதாவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
நாட்டில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை, மீறினால் அதே அளவுக்கு அபராதம், பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் உட்பட பல் வேறு அம்சங்கள் நிதி மசோதாவில் கூறப்பட்டிருந்தன. அவை நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டன. ஆண்டு பட்ஜெட்டுடன் வரிவிதிப்பு முறைகள் நிதியாண்டில் முதல் நாளிலேயே (ஏப்ரல் 1) அமலுக்கு வருவது இதுவே முதல் முறை.
முன்னதாக பிரிட்டிஷ் காலத் தில் இருந்து பிப்ரவரி கடைசி வாரத் தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையும் இந்த ஆண்டு மாற்றப் பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
அரசு செலவினங்களுக்கு ஒப்பு தல் பெறுவது உட்பட அனைத்து நடைமுறைகளும் மார்ச் 30-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டன. அதற் கடுத்த நாளே குடியரசுத் தலைவர் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசு நலத்திட்டங்களை அமல் படுத்துவதற்கும், வரித் திட்டங் களை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும்.
இதற்கு முன்னர் பிப்ரவரி கடைசி வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன்பிறகு பல்வேறு நடைமுறைகளை முடிக்க மே மாதம் ஆகிவிடும். அதன்பிறகு பருவமழைக் காலம் முடிந்த பிறகு அரசு திட்டங்களை செயல்படுத்துவது அல்லது நலத் திட்டங்களுக்கு நிதிகளை செல விடுவது போன்றவை ஆகஸ்ட் மாதம் கடைசியில்தான் முடியும். அந்த நிலை இந்த ஆண்டு முதல் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், மத்திய பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்டை தனித்தனியாக தாக்கல் செய்து வந்த முறையையும் பாஜக அரசு நீக்கிவிட்டது. இந்த பொது பட்ஜெட் டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்க்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.