விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு உத்தரவு
மத்தியபிரதேச மாநிலம் பிந்த் தொகுதி இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்களை சோதித்தபோது சமாஜ்வாதி கட்சிக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக ரசீது வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பிந்த் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்துவ தற்கான பணிகள் அங்கு முழுவீச் சில் நடந்து வருகின்றன. வாக்கா ளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான (விவிபாட்) இயந்திரமும் அந்த தொகுதிக்கு முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்னணு வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என தேர்தல் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சமாஜ்வாதி கட்சிக்கு அளித்த வாக்கு பாஜகவுக்கு விழுந்ததாக மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த இயந் திரத்தில் இருந்து ரசீது வெளியானதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தகவலை உள்ளூர் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
ஆனால் இதனை மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி சலீனா சிங் மறுத்துள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாக காங்கிரஸ் அறிவித் துள்ளது.
இதன் காரணமாக முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மத்திய பிரதேச மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விவிபாட் இயந்திரம் மூலம் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் 7 விநாடிகள் வரை காண முடியும். மேலும் அந்த இயந்திரத்தில் இருந்து வாக்களித்த கட்சிக்கான ரசீதும் வெளியே வரும். ஆனால் அதை வாக்காளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.