ஆண் என்ன; பெண் என்ன : ஐஸ்லாந்தில் சம ஊதியம்
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான ஊதியம் அளிக்கும் புதிய சட்டம் ஐஸ்லாந்து பார்லிமென்ட்டில் நிறைவேறியது.ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் மக்கள் தொகை 3.30 லட்சம். இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, ஆண்களை விட 7 சதவீதம் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்நாட்டு பார்லிமென்ட்டில் இது தொடர்பான புதிய மசோதா எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேறியது. இதன் மூலம் இச்சட்டத்தை நிறைவேற்றிய உலகின் முதல் நாடு என்ற பெருமை பெற்றது.
இதுகுறித்து அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சர் விக்லுன்ட்சன் கூறும்போது, ‘இந்த புதிய சட்டம் 2018 ஜன., முதல் அமலுக்கு வருகிறது. 25 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். சட்டத்தை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.
இந்தியாவில் ஆண் – பெண் இடையிலான ஊதிய வித்தியாசம் 25 சதவீதமாக உள்ளது.