டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
டெல்லியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இத்தாக்குதல் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “டெல்லியில் அசோக் விஹார் குடியிருப்புப் பகுதிக்கு அருகேவுள்ள பூங்காவில் பெண் பத்திரிகையாளர் அபர்ணா கல்ரா(45) புதன்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பலால் அவர் தாக்கப்பட்டார். தாக்குதலுக்கு உள்ளான அபர்ணா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கற்களைக் கொண்டு அந்தக் கும்பல் அவரை தாக்கியுள்ளது. அபர்ணா நடைப்பயிற்சிக்கு செல்லும்போது பணம், போன் என்று எதையும் எடுத்துச் செல்லவில்லை. இந்த நிலையில் அந்த கும்பல் எதற்கு அபர்ணாவை தாக்கியது என்று தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான அபர்ணா செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்களிலும் பணியாற்றியுள்ளார் என்று அபர்ணாவின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.