கேப்டன் ஸ்மித்துக்கு தோள் கொடுத்த டோணி !
மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் 2வது போட்டியின் முடிவில் டோணியின் ஸ்டைலில் புனே கேப்டன் ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இருப்பினும் புது கேப்டன் ஸ்மித்துடன் இறுதிவரை துணை நின்று புனே அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டார் டோணி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்தின. இதில் டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் குவித்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு ரகானே நல்ல துவக்கம் தந்து 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மாயக் அகர்வால் 6 ரன்களில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் தனது பங்கிற்கு 21 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் புனே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டோணியும், ஸமித்தும் களத்தில் இருந்தனர். பொல்லார்ட் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. கடைசி 3 பந்தில் 10 எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது புனே அணி. இருந்தாலும் களத்தில் டோணி இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கைய தளரவிடவில்லை. அப்போது 4வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் ஸ்மித். பின்னர் 2 பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. 5 வது பந்தையும் சிக்சருக்கு அனுப்ப புனே அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. வழக்கமாக சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைக்கும் டோணி, இம்முறை ஸ்மித் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்ததை மறுமுனையில் கூலாக பார்த்து ரசித்தபடி நின்றார். 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த ஸ்மித் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். மறு முனையில் இறுதிவரை ஸ்மித்துடன் களத்தில் நின்ற டோணி, 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில்தான் கேப்டன் பதவியை துறந்திருந்தார் டோணி. இருப்பினும் புது கேப்டன் ஸ்மித்துடன் இறுதிவரை துணை நின்று புனே அணியின் முதல் வெற்றிக்கு வித்திட்டார் டோணி. ஐபிஎல் வரலாற்றில் கேப்டானாக அல்லாமல் டோணி களமிறங்கிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.