சுற்றுச்சூழலை பாதுகாக்க 2020ல் பி.எஸ்.,6 வாகனங்கள் – மத்திய அரசு திட்டம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க 2020ம் ஆண்டில் பி.எஸ்.,6 தொழில்நுட்ப வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் வாகனங்கள் வெளியிடும் புகை பெரும் பங்கு வகிக்கிறது. இதை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். பி.எஸ்.,3 தொழில்நுட்பத்தில் தயாரான வாகனங்களில், 2.30 கிராம் கார்பன் மோனாக்சைடு, 0.20 கிராம் ஹைட்ரோ கார்பன், 0.15 கிராம் நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்கள் வெளியேறுகின்றன.
தற்போது அறிமுகம் செய்யப்படும் பி.எஸ்.,4 வாகனங்களில் 1 கிராம் கார்பன் மோனாக்சைடு, 0.10 கிராம் ஹைட்ரோ கார்பன், 0.08 கிராம் நைட்ரஜன் ஆக்சைடு வெளியேறும். இந்த தொழில்நுட்பம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு,
பெட்ரோல் போன்ற எரிபொருட்களில் உள்ள வாயுக்கள் இயந்திரத்திலேயே முழுமையாக எரிந்து, நச்சு வாயுக்கள் வெளிவராமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் பி.எஸ்.,5, பி.எஸ்.,6 மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள நகரங்கள்2010 ஏப்., முதல் முக்கிய நகரங்களான மும்பை, கோல்கட்டா, பெங்களூரூ, ஐதராபாத், செகந்திராபாத், அகமதாபாத், புனே, சூரத், கான்பூர், ஆக்ரா நகரங்கள் பி.எஸ்.,4 தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளன.
2014 அக்., முதல் புதுவை, மதுரா, வாபின், ஜான்நகர், அங்கலேஷ்வர், பாரக்பூர், டையூ, டாமன், சில்வாசா, ரேபரலி, அலகாபாத், கர்னால், வால்சார்ட், யமுனா நகர், குருஷேத்ரா, நிஷாமாபாத், மெடாக், மெகபூப்நகர் நகரங்கள் பி.எஸ்.,4 தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டன.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பி.எஸ்., 4 தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. 2020ல் காற்று மாசுபடாத வகையில் பி.எஸ்.,6 தொழில்நுட்ப வாகனங்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பழைய தொழில்நுட்ப வாகனங்கள் படிப்படியாக குறைந்து விடும் என்றார்.