பள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்வுகள்
தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 839 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம்(மார்ச்) 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைந்தது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.
பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-வது முதல் 9-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறை
உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ந்தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது. 21-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு முடிந்து வருகிற 28-ந்தேதி கடைசி வேலைநாளாக உள்ளது. இந்த பள்ளிகளுக்கு 29-ந்தேதி முதல் கோடை விடுமுறையாகும்.
கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப்படும். எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?
இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பிளஸ்-1 வகுப்புகள் அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன் 15-ந்தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதியும், பிளஸ்-1 வகுப்பு தொடங்கும் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.