தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை ‘டிவி’ ஒளிபரப்பு நிறுத்தம்
புதிய தலைமுறை, ‘டிவி’ நடத்திய கருத்து கணிப்பு, தினகரன் அணிக்கு எதிராக அமைந்ததை தொடர்ந்து, அதன் ஒளிபரப்பு, 15 மாவட்டங்களில், அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, ‘ஆர்.கே.நகர் மக்களின் நாடித் துடிப்பு’ என்ற தலைப்பில், புதிய தலைமுறை, ‘டிவி’ சார்பில், வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என, 70.21 சதவீத மக்கள்; ஜெ.,வின் உண்மையான அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் என, 45.32 சதவீதம் பேர்; தீபா என, 17.35 சதவீதம் பேர்; சசிகலா என, 4.72 சதவீதம்; பிறர் என, 6.99 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவை ஆதரிப்பது, மக்கள் எண்ணத்திற்கு விரோதமானது என, 65.03 சதவீதம் பேர்; தினகரனை துணை பொதுச்செயலராக, சசிகலா நியமித்தது தவறு என, 72.75 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும், தினகரன் அணிக்கு எதிராகவும், பன்னீர் அணிக்கு ஆதரவாகவும் அமைந்திருந்தன. இது, தினகரன் அணிக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகள், தொடர்ந்து வெளிவருவதை தடுக்க, அரசு கேபிளில், புதிய தலைமுறை, ‘டிவி’யை இருட்டடிப்பு செய்யும்படி, அதிகாரிகளுக்கு, தினகரன் அணியினர் உத்தரவிட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு முதல், திருவண்ணாமலை, மதுரை, நாகர்கோவில், காஞ்சிபுரம், விருதுநகர், விழுப்புரம் உட்பட, 15 மாவட்டங்களில், அரசு கேபிளில், புதிய தலைமுறை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, பத்திரிகை சுதந்திரத்தை காக்க, அனைத்து மாவட்டங்களிலும், அரசு கேபிளில், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, புதிய தலைமுறை தலைமை நிர்வாக அதிகாரி ஷியாம்குமார், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ மேலாண் இயக்குனர் குமரகுருபரனுக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.
அரசு கேபிள்களில் ‘புதிய தலைமுறை’ சேனல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இந்தச் செயலுக்கு கடுமையான எதிரப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.