ஊடக செய்தி எதிரொலி: சிறையில் சசிகலாவை சந்திக்க கெடுபிடி
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து மார்ச் 18-ம் தேதி வரை 31 நாட்களில் 28 பார்வையாளர்கள் சசிகலாவை சந்தித்து பேசியது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் சிறைத்துறை விதிகள் மீறப் பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, “சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்கு சாதகமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்” என அம்மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் சிறை அதிகாரிகளும், போலீ ஸாரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் விவேக், ராஜ ராஜன், சிவகுமார், கார்த்திகேயன் மற்றும் அதிமுக (அம்மா) கட்சியினர் சசிகலாவை சந்திக்க நேற்று அனுமதி கோரி உள்ளனர். ஆனால் சிறை அதிகாரி, “இனிமேல் அடிக்கடி சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியாது. சிறைத்துறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கைதியை சந்திக்க அனுமதிக்க முடியும்” என்று தெரிவித்துள் ளார்.
இதனிடையே அதிமுக (அம்மா) கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி மூலம் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேச சசிகலாவின் உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர்.