ஐபிஎல்: பெங்களூருவுக்கு முதல் வெற்றி; டெல்லியை வீழ்த்தியது
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, சீரான இடை வெளியில் முக்கிய விக்கெட்களை இழந்தது. கெய்ல் 6 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்ட மிழந்தார். அடுத்து களமிறங்கிய மன்தீப் சிங் 12 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் போல்டானார்.
தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் 24 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் நதீம் பந்தில், ஸ்டெம்பிங்க் ஆனார். 55 ரன் களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கேதார் ஜாதவுடன், ஸ்டூவர்ட் பின்னி இணைந்தார். பின்னி நிதானமாக பேட் செய்ய, கேதார் ஜாதவ் அதிரடியாக விளை யாடி 26 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடியின் அதிரடியால் பெங்களூருஅணி 13.1 ஓவரில் 100 ரன்களை எட்டியது. ஸ்டூவர்ட் பின்னி 18 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஷ்ணு விநோத் 9 ரன்களில் ரன்அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய கேதார் ஜாதவ் 37 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்தில் ஆடடமிழந்தார். அப்போது ஸ்கோர் 17 ஓவர்களில் 142 ஆக இருந்தது.
அடுத்து வந்த பவன் நெகி(10), டைமல் மில்ஸ் ரன் எதும் எடுக்காத நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்தில் போல்டானார்கள். 20 ஓவர்களின் இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
வெற்றிபெற 158 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலை யில் ஆடவந்த டெல்லி அணி நிதான மான ஆட்டத்தை கையாண்டது. இருப்பினும் தொடக்க ஆட்டக் காரரான தாரே (18 ரன்கள்) மற்றும் கருண் நாயர் (4 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்று ஆட்டம் கண்டது.ஒரு புறத்தில் நிலையாக ஆடிக்கொண்டிருந்த பில்லிங்ஸும் 25 ரன்களில் அவுட் ஆக அணியை முன்னெடுத்துச் செல்லும் பணியில் சஞ்சு சாம்சனும், ரிஷப் பந்த்தும் ஈடுபட்டனர். இதனால் டெல்லி அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை எடுத்திருந்தது. டெல்லி அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது சஞ்சு சாம்சன் (13 ரன்கள்) அவுட் ஆனார்.
ஒரு புறம் பந்த் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 57 ரன்களை எடுக்க, மறுபுறம் டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துகொண்டிருந்தது. இதனால் டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.