பாகிஸ்தானில் ‘தங்கல்’ ரிலீஸ் இல்லை: ஆமிர்கானின் முடிவுக்கு இந்தி திரையுலகினர் வரவேற்பு
பாகிஸ்தானில் ‘தங்கல்’ ரிலீஸ் இல்லை என்று ஆமீர்கான் எடுத்திருக்கும் முடிவுக்கு இந்தி திரையுலகினர் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தங்கல்’. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைத் தாண்டியது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தி திரையுலகில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை ‘தங்கல்’ நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகாமல் இருந்தது.
பாகிஸ்தான் விநியோகஸ்தர்கள், தங்களுடைய நாட்டில் வெளியிடுவதற்காக ஆமிர்கானை அணுகினர். அந்நாட்டின் தணிக்கையின் போது இந்திய தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்ததிற்கு ஆமிர்கான் ஓப்புக் கொள்ளவில்லை.
இந்திய தேசியக்கொடியும், தேசிய கீதமும் படத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. ஆயினும், பாகிஸ்தான் குறித்து எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படியிருக்கும் போது ஏன் நீக்க வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவித்து, பாகிஸ்தானில் வெளியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார் ஆமிர்கான்.
ஆமிர்கானின் இந்த முடிவுக்கு இந்தி திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து, பாராட்டியுள்ளார்கள்.