முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் மூலம் ரூ.89 கோடி பணம் பட்டுவாடா: திடுக்கிடும் ஆவணங்கள் சிக்கின; தனி தேர்தல் அதிகாரி டெல்லி விரைந்தார்
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளன. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 8 அமைச்சர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளதும், இந்த ஆவணங்களுடன் தனி தேர்தல் அதிகாரி டெல்லி விரைந்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிபெறுவார் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. 2ம் இடத்தை பிடிக்க ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் கடுமையாக மோதி வருகின்றன. இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடும் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால், தொகுதியில் மோதல், கல் வீச்சு, ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய சசிகலா அணியினர் டிடிவி தினகரனுக்காக பணம் விநியோகம் செய்ததாக தகவல்கள் வெளியாகின. தடுக்க வந்த திமுகவினர், பொதுமக்கள் தாக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து ரெய்டு: சசிகலா அணியினர் சுமார் ரூ.126 கோடி வரை பணம் விநியோகம் செய்ததாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலை பங்களா, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு, குவாரி, கல்லூரி மற்றும் உறவினர்கள் வீடு, அவரது உதவியாளர் நைனார் வீடு, சேப்பாக்கத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட எம்எல்ஏ விடுதி மற்றும் நடிகர் சரத்குமார் வீடு, முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வீடு, அமைச்சருக்கு நெருக்கமான எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமியின் வீடு, இயக்குநர் குழந்தைசாமியின் வீடு உட்பட 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பணப்பட்டுவாடா: மேலும் எழும்பூர் நியூ லட்சுமி லாட்ஜில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் தங்கியிருந்த 3 அறைகளும் சோதனையிடப்பட்டன. இந்தச் சோதனையில் ரூ.6 கோடி ரொக்கம், பல கோடிக்கு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதேநேரத்தில், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் விநியோகம் செய்ததற்கான ஆவணங்களும் சிக்கின. இதுகுறித்த ஆவணங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், முதல்வர் மற்றும் 8 அமைச்சர்களின் பெயர்கள், அவர்களுக்கு தேர்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகள், மொத்த வாக்குகளில் 85 சதவீதம் பேருக்கு கொடுக்க வேண்டிய பணம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்கள், கட்சியின் சீனியாரிட்டி அடிப்படையில் டைப் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 38 பாகங்களும், அதில் உள்ள 33 ஆயிரத்து 193 வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய ரூ.13 கோடியே 27 லட்சத்து, 72 ஆயிரம் கொடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு 32 ஆயிரத்து 830 வாக்காளர்களுக்கு ெகாடுக்க வேண்டிய ரூ.13 கோடியே 13 லட்சத்து, 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சீனிவாசனிடம் 32 ஆயிரத்து 092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம், தங்கமணியிடம் 31 ஆயிரத்து 683 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 67 லட்சத்து 32 ஆயிரம், வேலுமணியிடம் 37 ஆயிரத்து 291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரம், ஜெயக்குமாரிடம் 29 ஆயிரத்து 219 பேருக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம், முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை எம்பியுமான வைத்திலிங்கத்திடம் 27 ஆயிரத்து 837 பேருக்காக ரூ.11 கோடியே 13 லட்சத்து 48 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆவணத்தில் அமைச்சர்கள் பணம் பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது. ஆர்.கே.நகரில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 695 வாக்குகள் உள்ளன. அதில் 85 சதவீதம் அதாவது 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 பேருக்கு ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பணம் அமைச்சர்களிடம் இருந்து அவர்களுக்கு கீழ் உள்ள குழுக்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பணம் சப்ளை: மற்றொரு ஆவணத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ராஜலட்சுமி, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவம், ெநல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் வி.முத்தையா, புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோரது பெயர்களும் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணங்கள் உண்மையானவையா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர். அதேநேரத்தில் நேற்று பிற்பகல் முதல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தவறானது என்று அதிமுக மூத்த தலைவர்களோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ இதுவரை மறுக்கவில்லை.
இந்நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் தமிழக தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த ஆவணங்கள் வெளியானதும், தேர்தல் அதிகாரி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.