விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்ட 3பேருக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன்
சென்னையில் கடந்த 7ம் தேதி தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பினர். நாளை காலை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான முக்கிய ஆவணங்கள் சோதனையில் சிக்கியதை தொடர்ந்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அவரது இல்லத்தில் 16மணி நேரம் நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. முக்கிய ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து நாளை காலை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சரத்குமாருக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இல்லத்திலும் 22மணி நேரம் சோதனை நடைபெற்றது. அவரையும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.