ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர்.கே., நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆர்.கே.நகரில் ஏப்., 12ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் 62 பேர் போட்டியிடுவதாக இருந்தது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, டில்லியில் நடந்த விரிவான ஆலோசனைக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக 29 பக்க விளக்கத்தை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.