எகிப்து சர்ச்சில் குண்டு வெடிப்பு : 45 பேர் பலி; 120 பேர் படுகாயம்
எகிப்தில், சர்ச்சில் குண்டு வெடித்ததில், 45 பேர் இறந்தனர்; 120 பேர் படுகாயம் அடைந்தனர்.ஆப்ரிக்க நாடான எகிப்தில், கடந்த சில ஆண்டுகளாகவே, சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள், குருத்தோலை ஞாயிறு தினத்தை நேற்று கடைபிடித்தனர். இதையொட்டி, எகிப்தின் டான்டா நகரில் உள்ள சர்ச்சில், நேற்று காலை, சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. இதில், கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, அங்கு வந்த ஒருவன், சர்ச்சுக்குள் வெடிகுண்டை வீசிவிட்டு, தப்பியோடினான். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 45 பேர் உடல் சிதறி, அதே இடத்தில் இறந்தனர்; மேலும், 120க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள்
தெரிவித்தனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எகிப்து அதிபர் அப்துல் சிசி, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.