ரஷ்யா- அமெரிக்கா மோதல் விஸ்வரூபம்
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ரஷ்யா- அமெரிக்கா இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிரியாவின் ராணுவத் தளத்தில் இருந்து அப்பாவி மக்கள் மீது ரசாயன குண்டு தாக்குதல் நடந்த நிலையில், அந்த தளம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது. ரஷ்யாவின் கண்டனத்தை அமெரிக்கா நிராகரித்தது. ரஷ்ய ராணுவ தலைமையகத்துக்கும், அமெரிக்க ராணுவ தலைமையகத்துக்கும் இடையே ஹாட்லைன் தொலைபேசி இணைப்பு செயல்பட்டது. அந்த இணைப்பை ரஷ்யா துண்டித்துவிட்டது.மேலும் ரஷ்யாவின் அதி நவீன போர் கப்பல்கள் சிரியா கடல் எல்லையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன. சிரியாவின் வான் பாதுகாப்பையும் ரஷ்ய ராணுவம் அதிகரித்துள்ளது.
பயணம் ரத்து : இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய பயணத்தை திடீரென ரத்து செய்தார்.அங்கு செல்ல 48 மணிநேரங்களே இருந்த நிலையில், பயணத்தை அவர் ரத்து செய்தார்.
அவர் கூறுகையில், ”சிரியாவில் நடக்கும் சம்பவங்கள் அங்குள்ள நிலையை மாற்றியுள்ளன. போர் நிறுத்தத்திற்கு சர்வதேச ஆதரவை உருவாக்குவதே என்னுடைய முதல் பணி. சிரியாவில் அரசியல் தீர்வை உருவாக்க ரஷ்யாவிடம் கேட்டு கொண்டுள்ளோம்,” என்றார்.