ரூ.1,590க்கு டிஜிட்டல் பரிமாற்றம்: ஜாக்பாட் அடித்தார் ரூ.1 கோடி!
ரூ.1,590க்கு டிஜிட்டல் பரிமாற்றம் செய்த நபர், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ‛லக்கி கிரஹாக் யோஹஜனா’ தேர்வில் மெகா பரிசான ரூ. 1 கோடியை வென்றார்.
ரூ.1 கோடி பரிசு:
‘டிஜிட்டல்’ முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் அதன் மூலம் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களுக்கு, குலுக்கலில், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. நுகர்வோர்களுக்காக ‛லக்கி கிரஹாக் யோஹஜனா’, வணிகர்களுக்காக ‛திகி தான் வியாபாரி யோஜனா’ என்ற திட்டங்களின் கீழ் மொத்தம் 340 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படும் என ‘நிதி ஆயோக்’ சி.இ.ஓ., அமிதாப் காந்த் தெரிவித்திருந்தார்.
அடித்தது ஜாக்பாட்:
இந்நிலையில் இதற்கான அதிஷ்டசாலிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்வு செய்தார். இதில் நுகர்வோருக்கான ‛லக்கி கிரஹாக் யோஹஜனா’ தேர்வில், மெகா பரிசான 1 கோடி ரூபாயை ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கியின் வாடிக்கையாளர் வென்றார். இவர் ரூ.1,590 மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொண்டதற்காக, ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.25 லட்சம் முறையே ‘பேங்க் ஆப் பரோடா’ வாடிக்கையாளர் மற்றும் ‘பஞ்சாப் நேஷனல் பேங்க்’ வாடிக்கையாளர் வென்றனர்.
ஐ.சி.ஐ.சி.ஐ.,க்கு முதல் பரிசு:
வணிகர்களுக்கான ‛திகி தான் வியாபாரி யோஜனா’ திட்டத்தின் கீழ் முதல் பரிசான ரூ.50 லட்சத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வென்றது. இரண்டாவது பரிசான ரூ.25 லட்சத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியும், மூன்றாவது பரிசான ரூ.12 லட்சத்தை கரூர் வைஷ்யா வங்கியும் வென்றன. வெற்றி பெற்றவர்களுக்கு, ஏப்., 14ம் தேதி நாக்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பரிசு வழங்க உள்ளார்.