ஐபிஎல் நட்சத்திரம் – ரஷித் கான்
சன் ரைசர்ஸ் அணியின் 18 வயது சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான்தான் இந்த ஐபிஎல் போட்டியின் தற்போதைய நாயகன். ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் நகரில் 1998-ம் ஆண்டு பிறந்த இவர் தனது 16 வயது முதலே பிரபல கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார்.
2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அவர், அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானின் டி20 அணியிலும் இடம் பிடித்தார். 26 ஒருநாள் போட்டிகளில் 53 விக்கெட்களையும், 24 டி20 போட்டிகளில் 40 விக்கெட் களையும் இவர் வீழ்த்தியுள்ளார்.
பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் இம்ரான் தகிர் போன்ற பிரபல வீரர்களை வாங்கவே ஆளில்லாதபோது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி, இவரை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த தொகைக்கு தான் தகுதியானவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் முதல் 2 ஐபிஎல் போட்டிகளிலேயே இவர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
தனது வளர்ச்சியைப் பற்றிக் கூறும் அவர், “ஐபிஎல் போட்டிகளில் நான் முக்கியத்துவம் பெறுவதன் மூலம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சர்வதேச அரங்கில் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்திய ரசிகர்கள் எனக்கு அளிக்கும் உற்சாகமும் நான் விக்கெட்களை வீழ்த்துவதற்கு முக்கிய காரணம்” என்கிறார்