விமான ஊழியர்கள் உதவியுடன் 42,000 அடி உயரத்தில் ‘குவா குவா’
துருக்கியில், 42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த, 28 வயது பெண்ணுக்கு, விமான ஊழியர்கள் உதவியுடன், அழகான பெண் குழந்தை பிறந்தது. கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா இடையில் உள்ள நாடான துருக்கியைச் சேர்ந்த பயணிகள் விமானம், கினியா தலைநகர் கொனாக்ரியில் இருந்து, துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டு சென்றது. 42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, அந்த விமானத்தில் பயணித்த, நபி டியாபி என்ற கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, விமான ஊழியர்களும், பயணிகள் சிலரும், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க உதவி செய்தனர். சிறிது நேரத்தில், நபி டியாபிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு, கதிஜு எனப் பெயரிடப்பட்டது.
வழியில், ஆப்ரிக்க நாடான, பர்கினா பாஸோவில் விமானம் தரையிறங்கியபோது, தாயும், குழந்தையும் அங்குள்ள உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது, தாயும், குழந்தையும் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.