ஒவ்வொரு பந்து முடிந்தவுடன் ஸ்கோர் போர்டைப் பார்க்காதே: தோனி கொடுத்த அறிவுரை
தனது கிரிக்கெட் ஆட்டத்தின் மெருகேற்றத்துக்கு தோனி அளித்த விலைமதிப்பற்ற ஆலோசனைகளே காரணம் என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தோனி இங்கிலாந்து தொடரின் போது தனக்கு இன்னிங்ஸை பினிஷிங் செய்யும் முறை பற்றியும், பந்து வீச்சு பற்றியும் ஏராளமான ஆலோசனைகளை வழங்கியதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
இனி ஹர்திக் பாண்டியா, “தோனியிடமிருந்து ஏகப்பட்ட ஆலோசனைகளைப் பெற்றேன். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது அவரிடம் நிறைய நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பேட்டிங், பவுலிங் குறித்து அவரிடம் நிறைய ஆலோசனைகளைப் பெற்றேன்.
ஒருநாள் போட்டி அல்லது டி20 என்று எதுவாக இருந்தாலும் பினிஷிங் பொறுப்பை கையில் எடுத்து ஆடுவது மிகவும் கடினமே. அந்நேரத்தில் இது மனரீதியான ஒரு ஆட்டமாக மாறிவிடுகிறது. மீதமுள்ள ஓவர்கள் எடுக்க வேண்டிய ரன்கள் அதற்கான திட்டமிடல் என்று தோனி எனக்கு நிறைய விலைமதிப்பற்ற ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதற்காக ஒவ்வொரு பந்துக்குப் பிறகு ஸ்கோர்போர்டைப் பார்க்க வேண்டாம் என்றார். ஆனால் எதிர்தரப்பு பவுலர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று முக்கியமான அறிவுரை ஒன்றையும் வழங்கினார். இதற்காக தோனிக்கு நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அசோக் டிண்டாவை ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசி 15 பந்தில் 35 ரன்கள் விளாசினார். அன்று கொல்கத்தாவுக்கு எதிராக 11 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். இது வெற்றியைத் தீர்மானித்தது. மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் எதிர்கொண்டு ஆட்கொள்ளத்தக்க ஒரு சக்தியாக எழுச்சிபெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.