3 மணி நேரம் பரபரப்பு விசாரணை: தனுஷ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். தங்களுக்கு மாதம் பராமரிப்பு செலவுக்கு ரூ. 65 ஆயிரம் வழங்க தனுஷுக்கு உத்தரவிடக் கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மேலூர் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள கதிரே சனின் வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கதிரேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டைட்டஸ் வாதிடும்போது, இந்த வழக்கிற்காக தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ் போலியானது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு குடும்பத்தில் மகன் மிகப்பெரிய சொத்து. அந்த மகன் தொலைந்த உடனேயே ஏன் போலீஸில் புகார் அளிக்கவில்லை என்றார். அதற்கு, ஒருவரின் உடலில் இருக்கும் அங்க அடையாளங்களை அழிக்க முடியும் என்று தடயவியல் புத்த கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு தயாராக உள்ளோம். மருத்துவர் களின் அறிக்கையை வைத்து இந்த வழக்கில் முடிவெடுக்கக்கூடாது என டைட்டஸ் கூறினார்.
தனுஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வாதிடும்போது, எதிர்தரப்பினர் தங்களது காணாமல்போன மகனை கண்டுபிடிக்க 2002-ம் ஆண்டில் இருந்து 2016 வரை சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 14 ஆண்டுகள் கழித்து இப்போது நீதிமன்றம் வந்துள்ள னர். அவர்களின் மகன் தான் தனுஷ் என்பதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை. கலைச் செல்வன் காணாமல் போனதாக எதிர்தரப்பினர் கூறும் தேதிக்கு முன்னதாகவே தனுஷின் துள்ளு வதோ இளமை படம் வெளி வந்துவிட்டது என்றார். பின்னர் தனுஷின் முதல் படமான ‘துள்ளு வதோ இளமை’ படத்தின் தணிக் கைக் குழு சான்றிதழை தாக்கல் செய்தார்.
இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இரு தரப்பு வாதங்கள் முடிவுக்கு வந்தன. தொடர்ந்து தனுஷ் மனு மீதான தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடா மல் நீதிபதி ஒத்திவைத்தார்.