தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்ணை ஏடிஎஸ்பி தாக்கிய விவகாரத்தில் 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் நெடுஞ்சாலை அருகில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. இவற்றுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுக்கடைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3 மதுக்கடைகள் மூடப் பட்டன. அவற்றுக்கு பதிலாக புதிய கடைகளை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதை யறிந்த பொதுமக்கள் நேற்று சோமனூர் – காரணம்பேட்டை நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் காலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை அங்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.
அவர்கள் மறுத்ததால், தடியடி நடத்தப்பட்டது. அப்போது, ஏடிஎஸ்பி பாண்டியராஜன், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடுமையாகத் தாக்கினார். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பாகின. நேற்று காலையில் பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகின. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
மாநில ஆணையம் நோட்டீஸ்
இந்நிலையில், தமிழக காவல் துறைக்கு மாநில மனித உரிமை கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
‘டாஸ்மாக்கை எதிர்த்து போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி’ எனும் தலைப்பில் பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி இது தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை 6 வாரங்களுக்குள் மாநில மனித உரிமைகள் ஆணைய பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முதல்வர் ஆலோசனை
இந்நிலையில் நேற்று காலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டியும் உடன் இருந்தார்.
தேசிய ஆணையம்
திருப்பூர் சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.