கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன்
தனக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இது வெறும் வதந்தியாக இருக்கும். எனக்கு அம்மாதிரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை” என்றார்.
டிடிவி தினகரன், துணை பொதுச் செயலாளர் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
அதிமுக சின்னம் முடக்கத்தில் மத்திய அரசு தலையீடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “எனக்கு அந்த மாதிரியான தலையீடு எதுவும் தெரியவில்லை. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியது என்னவோ எங்களை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பே. அதை, தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. அதனால், சின்னம் முடக்கம் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை” என்றார்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் அரசு அதிகாரிகள் மீது குற்றம் கூறி உண்ணாவிரதம் இருக்கிறாரே என்ற கேள்விக்கு, “இது கட்சிக்குள் நிலவும் சுதந்தரத்தைக் காட்டுகிறது” என்றார்.
அமைச்சர்களுடனான ஆலோசனையின்போது, சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவி வகிப்பதற்கு ஓ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு மாற்றம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. விஜயபாஸ்கரை நீக்கும் திட்டமும் இல்லை என்றார்.