திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?- ஸ்டாலின் பதில்
திமுக ஒருங்கிணைத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டம் ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமல்ல விவசாயிகளின் நல்வாழ்வை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சென்னையில் வரும் 16-ம்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தினால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமல்ல இது. விவசாயிகளின் நல்வாழ்வை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டம். தயவுசெய்து, ஆட்சி மாற்றம் குறித்து என்னிடம் கருத்து கேட்பதை தவிர்த்து, தினகரன் வீட்டில் ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக செய்தி வருகிறது, எனவே, அங்கு சென்று கேட்டறிந்து கொள்ளுங்கள்” என்றார்.
இதற்கு முன்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக நீங்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் உங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். இப்போது கூட்டணியில் இல்லாத கட்சிகளும் பங்கேற்பதை எப்படி பார்க்கின்றீர்கள்? என வினவப்பட்டது.
அதற்கு, “கடந்த முறை நடந்த கூட்டத்தின் போதும் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். இப்போது விவசாயிகளின் நிலை அப்போது இருந்ததை விட இன்னும் மோசமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தவிர மீதமுள்ள எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகளாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றால், அவர்கள் தான் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை என்பதால், அவர்களைக் கண்டித்து, அதையொட்டி, எல்லா கட்சிகளுடனும் கலந்து பேசி தீர்மானங்களை இயற்ற இருக்கிறோம். அதனால் தான் அவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை” என்றார்.
திமுக அறிவித்துள்ள கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.