அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை: அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை – டிடிவி தினகரன் உறுதி
அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கட்சி, ஆட்சியில் எம்எல்ஏக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று அதிமுக (அம்மா) கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அம்பேத்கரின் 127- வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிமுக (அம்மா) கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிர்வாகிகளுடன் இணைந்து கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின், அவர் அடையாறில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். பின்னர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், நிலோபர் கபீல் உள்ளிட்ட அமைச்சர்கள், பழனியப்பன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வீட்டில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை குறித்து தினகரன் கூறியதாவது:
நான் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திவிட்டு அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதையடுத்து அமைச்சர்கள், நிர்வாகிகள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக என் வீட்டுக்கு வந்தனர். ஜாலியாக நாங்கள் சில விஷயங்களை பேசினோம். சிலர் ஒரு சில விஷயங்கள் குறித்து பேசும்போது, காரசாரமாகவும் பேச்சு இருந்தது.
அமைச்சர்கள் சிலர் குறித்து வரும் செய்திகள் வதந்தியாக இருக்கலாம். தற்போது அமைச்சர்கள் என்னை சந்தித்து சென்றுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து விளக்கம் அளித்துள்ளார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. யாரும் அது தொடர்பாக அழுத்தம் தரவில்லை. வருமான வரித்துறை அல்ல; வேறு எந்த துறையும் இந்த அரசிடமும், அமைச்சர்களிடமும் விசாரணை நடத்தினாலும் எந்த தகவலும் வெளிவரப்போவதில்லை. சோதனை முடிந்ததும் தானாக அடங்கிவிடும்.
வருமான வரித்துறை சோதனை மற்றும் இரட்டை இலை முடக்கப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை. இரட்டை இலை விவகாரத்தில் எங்களுக்கு எதிரானவர்கள்தான் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம் என்பது, அந்த அளவுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் சுதந்திரம் இருப்பதை காட்டுகிறது. உண்ணாவிரதத்தை முடித்து எம்எல்ஏ சென்றுவிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சரவை மாற்றம், விஜயபாஸ்கர் தொடர்பான நடவடிக்கை குறித்து கேட்டனர். அதற்கு தினகரன் பதிலளிக்கும்போது, ‘‘அமைச்ச ரவையில் எந்த மாற்றமும் இருக்காது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ‘மெட்டீரியல் எவிடென்ஸ்’ எதுவும் சிக்கவில்லை. அவர் புத்தாண்டுக்கு ஊருக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்’’ என்றார்.