ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே நாளில் இரண்டு ‘ஹாட்ரிக்’: பத்ரீ, ஆண்ட்ரூ டை சாதனை
டப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் ‘ஹாட்ரிக்’ சாதனையை பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ் நாட்டவர்) நேற்று படைத்தார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது ஓவரை பத்ரீ வீசினார். இதன் 2-வது பந்தில் பார்த்தீவ் பட்டேல் (3 ரன்) ‘கவர்’ திசையில் நின்ற கெய்லிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய மெக்லெனஹான் (0) புல்டாசாக வீசப்பட்ட பந்தை தூக்கியடித்த போது சிக்கினார். 4-வது பந்தை எதிர்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா (0) தாழ்வாக ஊடுருவிய பந்தை தடுக்க முடியாமல் கிளன் போல்டு ஆகிப்போனார். இதன் மூலம் 36 வயதான பத்ரீ ஹாட்ரிக் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் தொடர்ச்சியாக இரவில் நடந்த புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு டையும் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து அட்டகாசப்படுத்தினார். ஆட்டத்தின் 20-வது ஓவரில் அங்கித் ஷர்மா (25 ரன்), மனோஜ் திவாரி (31 ரன்), ஷர்துர் தாகுர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக கபளகரம் செய்து ஹாட்ரிக் சாதனையாளராக ஜொலித்தார். 30 வயதான ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆவார்.
இவற்றையும் சேர்த்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 16 ‘ஹாட்ரிக்’ பதிவாகியுள்ளன. பத்ரீ, ஆண்ட்ரு டை இருவருக்கும் இந்த சீசனில் இதுதான் முதல் ஆட்டமாகும். ஐ.பி.எல். போட்டியில் ஒரே நாளில் இரண்டு ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.