சென்னை அணிக்கு பிசிசிஐ அழைப்பு – மீண்டும் ‘டாஸ் ‘ போடுகிறார் தோனி!
சூதாட்டப் புகார் காரணமாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட இரு அணிகளுக்கும், 2018-ம் ஆண்டு தொடருக்கான ‘Invitation To Tender for media rights -க்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளன. சென்னை அணி, இரு முறை ஐபிஎல் சாம்பியன். ராஜஸ்தான் அணியும் கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது. இந்த அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, புனே மற்றும் குஜராத் அணிகள் உருவாகின. கலைக்கப்பட்ட அணி வீரர்களில் பெரும்பாலானோர், நடப்புத் தொடரில் இந்த அணிகளுக்காக விளையாடிவருகின்றனர். சென்னை அணியின் கேப்டன் தோனி, புனே அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும்பட்சத்தில்… தோனி, சென்னை அணிக்குத் திரும்புவார். புனே, குஜராத் அணிகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் மாறி, பெயர் மாற்றத்துடன் மீண்டும் களம் இறங்கலாம்.
சென்னை அட்வெர்டைசிங் கிளப் விழாவில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் என். ஸ்ரீநிவாசன், ”2018-ம் ஆண்டு, தோனி தலைமையில் சென்னை அணி புதிய உத்வேகத்துடன் களம் இறங்கும்” எனப் பேசியிருந்தார். அதனால், சென்னை அணிக்கு மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்படுவது உறுதியாகிறது. சென்னை அணிக்கு தோனி கேப்டனாகும்பட்சத்தில், மீண்டும் தோனி ‘டாஸ்’ போட களம் இறங்குவார்.
புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி அண்மையில் நீக்கப்பட்டார். அந்த அணியின் உரிமையாளர் ஹர்ஸ் கோயங்கா, தோனியை நடத்தும்விதம் குறித்து அவரது மனைவி சாக் ஷி ‘ட்விட்’ வழியாக கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். அதில் ,’ காலம் சக்தி வாய்ந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, சென்னை , ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்கும் பட்சத்தில் புனே அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.