தலைமை நீதிபதி என் வீட்டில் ஆஜராக வேண்டும்: நீதிபதி கர்ணன் உத்தரவால் சர்ச்சை
இந்தியாவின் நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அள வுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்த 6 நீதிபதிகளையும் தனது இல்லத்தில் ஆஜராகுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கர்ணன் சம்மன் அனுப்பி வைத்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் பிற 6 நீதிபதிகள் நீதிமன்ற அவ மதிப்பு தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டனர். தவிர அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டையும் பிறப்பித்தனர். அதன் அடிப்படை யில் கடந்த மாதம் மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் 6 நீதிபதி கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நீதிபதி கர்ணன் ஆஜரா னார். பின்னர் இவ்வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், தனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அனைவரையும் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணியளவில் தனது வீட்டில் நேரில் ஆஜராகும்படி தான் ஒரு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் ‘‘உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர் வில் இடம்பெற்றிருந்த 7 நீதிபதி களும் எனக்கு எதிராக வேண்டு மென்றே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, என்னை வெகுவாக இழிவுபடுத்தி விட்டனர்’’ என்றார்.
இது தொடர்பாக நீதிபதி கர்ணன் கையெழுத்திட்டு பிறப்பித்த அந்த உத்தரவில், ‘எஸ்சி மற்றும் எஸ்டி துன்புறுத்தல்கள் சட்டம் 1989-ன்படி 7 நீதிபதிகளுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனது மன நலம் குறித்து கேள்வி எழுப்பினார். அதையே மற்ற 6 நீதிபதிகளும் கேட்டனர். இத்தகைய கேள்வி மூலம் அவர்கள் என்னை அவமதித்துவிட்டனர். எனக்கு தெளிவான மனநிலை இல்லாத காரணத்தினால், இவ் வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக கூறியிருப்பதும் எனக்கு கூடுதல் அவமானத்தை தந்துவிட்டது’’ என குறிப்பிட் டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல் சாசன அமர்வுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, நீதித்துறையில் பெரும் அதிர்ச்சி அலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.