ஸ்ரீநகரில் போராட்டக்காரர்கள் கல்வீச்சின் போது ராணுவ ஜீப்பில் இளைஞரை கட்டிவைத்தது குறித்து விசாரணை
‘‘ஸ்ரீநகரில் போராட்டக்காரர்களின் கல்வீச்சில் இருந்து தப்பிக்க, இளைஞரை ராணுவ ஜீப்பில் கட்டி வைத்து கேடயமாகப் பயன்படுத்தி யது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்குக் கடந்த 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பல வாக்குச்சாவடி களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பாது காப்புப் படையினர் மீது தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டனர். கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர்.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்து, கல்வீச்சில் இருந்து தப்பிக்க மனித கேடயமாகப் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய தாக வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இது சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியது. இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவில், ‘கல்வீச்சில் ஈடுபட்டால் இந்த இளைஞருக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்’ என்று போராட்டக்காரர்களை வீரர்கள் எச்சரிக்கும் குரலும் இடம்பெற் றுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்றும் வெளி யாகி உள்ளது. அதை பார்த்து நாடு முழுவதும் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். ஆனால், ஜீப்பில் இளைஞரைக் கட்டி வைத்த வீடியோ அந்த அளவுக்கு மக்களிடம் கோபத்தை உண்டாக்க வில்லை என்பது மிகவும் அவ மானகரமானது. இந்த வீடியோ குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ட்விட்டர் பக்கத்தில் உமர் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, ‘‘வீடியோவின் உண்மைதன்மை குறித்து தீவிர விசாரணை நடை பெறுகிறது’’ என்றார். இந்த வீடியோ பத்காம் மாவட்டம் பீர்வா பகுதி யில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பீர்வா தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் மீது தாக்குதல் வீடியோ
ஸ்ரீநகர் இடைத்தேர்தலின் போது பத்காம் மாவட்டம் சதூரா பகுதியில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர். ஆனால், பதிலுக்கு வீரர்கள் திருப்பித் தாக்காமல் அமைதியாக இருந்தனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவைப் பார்த்து நாட்டு மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு விளை யாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் காஷ்மீரில் சர்ச்சைக்குள்ளான வீடியோக் கள் குறித்து அறிக்கை சமர்ப் பிக்கும்படி போலீஸாருக்கு முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.
பொறுமை காத்த சிஆர்பிஎப் வீரர்கள்
காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வைத் நேற்று கூறிய தாவது: பாதுகாப்புப் படை வீரர் கள் மீது தாக்குதல் நடந்தால், உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் திருப்பி தாக்குதல் நடத்தி இருப்பார்கள். ஆனால், காஷ்மீரில் தாக்குதல் நடந்த போது அமைதியாக அதை தாங்கிக் கொண்டு பொறுமை காத்த சிஆர்பிஎப் வீரர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சிஆர்பிஎப் அளித்த புகாரின்படி சதூரா காவல் நிலைய போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அதே பகுதியில் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து சிஆர்பிஎப் வீரர் சுடுவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. இதுகுறித் தும் எப்ஐஆர் பதிவு செய்து விசா ரணை நடத்தப்படுகிறது. இவ் வாறு டிஜிபி வைத் கூறினார்.