அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 94-ஆக அதிகரிப்பு
ஆப்கனில் ஐஎஸ் தீவரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தான், நங்கர் கார் மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அச்சின் மாவட்டம் உள்ளது. இங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று கூறப்படும் மிகப்பெரிய குண்டை அமெரிக்க விமானம் வியாழக்கிழமை வீசியது. இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பதுங்குமிடம் மற்றும் சுரங்க வளாகம் அழிக்கப்பட்டதாகவும் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 94 -ஆக அதிகரித்துள்ளதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) நன்கர்ஹர் மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 94- ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.
அமெரிக்க தாக்குதலுக்கு ஆப்கன் அதிபர் ஆதரவு:
ஆப்கனில் கடந்த வாரம் முதலே ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்க படைகள் தீவிரம் காட்டி வந்தன. இதில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி முழு ஆதரவை அளித்துள்ளார். எனினும் அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள் அமெரிக்கா ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் இடமல்ல என்று கண்டனங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.