இந்திய வீரர்களுடன் நட்பு முறையில்தான் பழகுகிறேன்: டேவிட் வார்னர்
சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் சில சர்ச்சைகளும், கருத்து வேறுபாடுகளும் இரு அணி வீரர்களிடையே ஏற்பட்டாலும் தான் இன்னமும் கூட இந்திய வீரர்களுடன் நட்பு முறையில் பழகி வருவதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரரும், சன் ரைசர்ஸ் கேப்டனுமான டேவிட் வாரனர் தெரிவித்தார்.
“நாங்கள் தனிப்பட்ட நபர்களாக ஒருவருடன் ஒருவர் எளிதாக இணக்கம் கொள்ள முடிகிறது. இரு அணிகளும் மோதும் போது அது வேறாக இருக்கிறது. களத்தில் இரு அணி வீரர்களுமே தங்கள் நாடு வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முனைப்பில் ஆடுகிறோம்.
களத்திலும் வெளியிலும் சில தகராறுகள், கோணங்கித் தனங்கள் இருக்கும் ஆனால் நாங்கள் சிறந்த நண்பர்களாகவும் இருக்கிறோம். நாங்கள் நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்கிறோம் இது சர்வதேச கிரிக்கெட்டில் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
இந்திய-ஆஸ்திரேலிய தொடர் மிகவும் அபாரமான தொடர், ரசிகர்கள் தங்கள் இருக்கையின் முனையில் அமர்ந்து பார்க்குமாறு மிகவும் சுவாரசியமாக ஆடப்பட்ட தொடர்.
அனைவருமே அந்தத் தொடரை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகவே நான் கருதுகிறேன். வெற்றி பெற முடியாமல் போனது, குறைந்தது டிரா செய்ய முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. எங்களைப்பொறுத்தவரை நிறைய பாசிட்டிவ் அம்சங்களை கண்டுகொண்டோம். இந்த சூழ்நிலைகளில் எங்களால் ஆட முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.
கடினமாக, சவாலாக ஆடி உலகின் நம்பர் 1 விளையாட்டாக கிரிக்கெட் ஆட்டம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
இவ்வாறு கூறினார் வார்னர்