சுறாப்புட்டு
என்னென்ன தேவை?
சுறா மீன் – கால் கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
தனி மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சுறா மீனைச் சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி ஆறவிடுங்கள். ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கிவிடுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்குங்கள். இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் தோலுரித்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து அது உதிரி உதிரியாக வரும்வரை சிறு தீயில் வைத்துக் கிளறிவிடுங்கள். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் நாவூறும் சுறாப்புட்டு தயார். சாதத்தில் இந்த மசியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.