பிரேசில் உலகக்கோப்பை கால்பந்து: ஸ்டேடியம் கட்டுமானங்களில் பெரிய அளவில் பணம் சுருட்டல்
பிரேசிலில் நடைபெற்ற 2014 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் 12 ஸ்டேடியத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகைகளில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் அரசு அதிகாரிகல், கட்டுமான நிறுவன அதிகாரிகள் ஆகியோர் பெரிய அளவில் ‘பணம் பார்த்ததாக’ உள்நாட்டு ஊடகச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
குளோபோ நியூஸ் நெட்வொர்க் இது பற்றி தனது செய்தியில் குறிப்பிடும் போது, அரசு அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் உயரதிகாரிகள் பெரிய அளவில் பணம் சுருட்டியதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் லாபங்களைப் பிரித்துக் கொள்வதற்காக திட்டத்தின் செலவுகளை பெரிய அளவில் கூடுதலாகக் காட்டியதாகவும் இதில் ஈடுபட்ட சிலரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது விசாரணையில் உள்ள ஸ்டேடியக் கட்டுமானங்கள் வருமாறு: ரியோவில் உள்ள மரகனா ஸ்டேடியம், பிரேசிலியாவில் உள்ள மேன் காரின்ச்சா மைதானம், ரெசிபேயில் உள்ள எரெனா பெர்னம்புகோ, உள்ளிட்ட ஸ்டேடியங்கள் கட்டுமானங்களில் பெருமளவு பணம் சுருட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது
ரியோவில் உள்ள மரகனா ஸ்டேடியத்திற்கு திட்டமிடப்பட்ட செலவைக் காட்டிலும் 75% கூடுதலாகியுள்ளது.
பிரேசிலியாவில் உள்ள மிகச் செலவு பிடித்த ஸ்டேடியம் 238 மில்லியன் டாலர்கள்தான் முதலில் குறிப்பிடப்பட்டது, ஆனால் 447 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான ஓடெபிரகெட் நிறுவனத்தின் 77 முன்னாள் அதிகாரிகள் இந்த முறைகேட்டை கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்த ஊழல் குறித்து அனைவரது வாக்குமூலங்கள் அடங்கிய வீடியோவை வெளியிடுமாறு இந்த விசாரணையின் உச்ச நீதிமன்ற சிறப்பு நீதிபதி எட்சன் ஃபாச்சின் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.