ஜ.நா.விடம் சமர்ப்பிக்க ஜாதவ் பற்றி புது அறிக்கை தயார் செய்யும் பாகிஸ்தான்
இந்திய கடற்படை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகவும், கராச்சி மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜாதவ் தொடர்பாக புது அறிக்கையை பாகிஸ்தான் தயார் செய்து வருவது தெரியவந்துள்ளது.
ஜாதவுக்கு எதிரான ஆதாரங்கள், நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த அறிக்கையை அந்நாட்டு அரசு தயார் செய்து வருகிறது. மேலும், அதில், ஜாதவ் கைது, ரகசிய தகவல் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டை குறித்த தகவல் இடம் பெறுகிறது. இந்த புதிய அறிக்கையை அங்கு உள்ள அனைத்து நாட்டு தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அளிக்க உள்ளது. மேலும், ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் அந்த புதிய அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.