Breaking News
படம் பார்க்காமல் விமர்சிப்பதா? ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரியதர்ஷன் தாக்கு

64வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அக்‌ஷய்குமார், தேர்வு குழு சிறப்பு விருது மோகன்லால் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. தேர்வு குழு தலைவராக பிரியதர்ஷன் இருப்பதால் தனது நண்பர்களான இருவருக்கும் விருது தந்திருப்பதாகவும், தங்கல் படத்தில் சிறப்பாக நடிப்பை வெளியிட்ட ஆமிர்கானுக்கு விருது வழங்கப்படாதது பாரபட்சம் எனவும் விமர்சனம் எழுந்தது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இதுகுறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். பொருத்தமானவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை. பாரபட்சமாக வழங்கப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஏற்கனவே பதில் அளித்திருந்த பிரியதர்ஷன், ஆமிர்கானுக்கு கடந்த 2008ம் ஆண்டு தாரே ஜமீன் பர் படத்துக்கு தேசிய விருது வழங்கியபோது அதை அவர் பெற மறுத்துவிட்டார். மீண்டும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டால் அதையும் ஏற்க மறுத்து விடுவார். இதனால் விருது வீணாவதைவிட சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கும் வேறு நடிகருக்கு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தங்கல் படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

ஏ.ஆர்.முருகதாஸின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவிக்காமலிருந்த பிரியதர்ஷன் தற்போது அவருக்கு சூடான பதில் அளித்திருக்கிறார். விமர்சனம் செய்பவர்களிடம் நான் குறிப்பாக பார்ப்பது என்னவென்றால் அவர்கள் யாருமே விருது பெற்ற படங்களை பார்க்காதவர்கள். மராத்தி, வங்காள மொழிப்படங்களில் அற்புதமான கருத்துக்கள் அடங்கியிருந்தன. இயக்குனர் முருகதாஸும் விருது பெற்ற படங்கள் ஒன்றைகூட பார்த்திருக்க மாட்டார். அப்படியிருக்கும்போது அவர் எப்படி தேசிய விருது தேர்வை விமர்சிக்கலாம். தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்கு எந்த மதிப்பும் கிடையாது. அது தீர்ப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.