வடகொரிய ஏவுகணை சோதனை தோல்வி
வடகொரியாவின் ஏவுகணை சோதனை, தோல்வியில் முடிந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இரண்டாம் சங். இவரது 105வது பிறந்தநாள் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் இரண்டாம் சங் சதுக்கத்தில் நேற்று முன்தினம் ராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. வழக்கமாக இவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட போர் ஒத்திகை, ஏவுகணை சோதனை போன்றவற்றை வடகொரியா நடத்தும். இந்த முறை இவரது பிறந்தநாளில் தனது 6வது அணு குண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டிருந்தது. இதற்கு அந்நாடு தயாராகி வருவதை செயற்கைக்கோள் போட்டோக்களும் உறுதி செய்தன.
இதனையடுத்து, சர்வதேச விதிமுறைகளை மீறி ஆயுத சோதனையில் ஈடுபடும் வடகொரியா மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கொரியா தீபகற்ப பகுதிக்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல்வின்சன் தலைமையிலான போர்க்குழுவை அனுப்ப அமெரிக்க கடற்படை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. கிம் இரண்டாம் சங்கின் 105வது பிறந்தநாளில் வழக்கம்போல் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ராணுவ அணிவகுப்பை ஏற்றார்.
இந்த அணிவகுப்பு முடிந்த சில மணி நேரங்கள் கழித்து தெற்கு ேஹாம்கியாங் மாகாணத்தில் சின்போ பகுதியில் ஏவுகணை சோதனையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. ஆனால், இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்ததாக தென்கொரிய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்ததை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. அமெரிக்க பசிபிக் பிரிவு ராணுவ அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “வடகொரியா ஏவுகணை, ஏவிய ஒரு சில நிமிடங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தது. அது எந்தமாதிரியான ஏவுகணை என்பதை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.