19ம் நூற்றாண்டின் கடைசி நபர் உலகின் மூத்த பெண்மணி 117வது வயதில் காலமானார்
உலகின் மூத்த பெண்மணியாக கின்னஸ் சாதனை படைத்த எம்மா மார்டினா லுய்ஜியா மொரானா, 117வது வயதில் காலமானார்.
இத்தாலியை சேர்ந்த எம்மா மார்டினா, 1899ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர். இவர்தான், உலகின் மூத்த நபர் மற்றும் மூத்த பெண்மணி என கடந்தாண்டு மே மாதம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றார். 19, 20, 21ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருக்கிறார். 2 உலகப் போர்களை பார்த்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடிய எம்மா மார்ட்டினா, 90 வயது வரை உணவு பழக்கத்தை முறையாக கடைபிடித்து வந்தார். இவரது தினசரி உணவு, 3 முட்டை (2 பச்சையாக, ஒன்று வேகவைத்தது), இத்தாலியன் பாஸ்தா, பச்சை இறைச்சியாகும்.
எம்மாவின் கணவர் முதல் உலகப் போரில் இறந்தார். பின்னர், 1926ம் ஆண்டு ஒருவர் எம்மாவை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 6 மாதத்தில் பிறந்த குழந்தை இறந்ததை தொடர்ந்து, கணவரை விரட்டி அடித்தார் எம்மா. அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் எம்மா மார்ட்டினா காலமானார். இவரே 19ம் நூற்றாண்டின் கடைசி நபராவார். எம்மாவின் மறைவைத் தொடர்ந்து, தற்போது உலகில் வாழும் மூத்த நபர் என்ற பெருமை ஜமைக்காவின் வைலட் பிரவுனுக்கு கிடைத்திருக்கிறது. இவர் 1900ம் ஆண்டில் பிறந்தவர். உலகில் அதிக வயது வரை வாழ்ந்த நபர் என்ற பெருமையைப் பெற்ற பிரான்சின் ஜென்னி லூயிஸ் கிளாமண்ட்டின் (122 வயது, 164 நாட்கள்) கின்னஸ் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.