ரகளையில் ஈடுபடும் விமான பயணிகளுக்கு ரூ.15 லட்சம் அபராதம்: ஏர் இந்தியா பரிசீலனை
கடந்த மாதம் 23-ந் தேதி ஏர் இந்தியா விமானத்தில் புனே நகரில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தனக்கு சொகுசு பிரிவில் இருக்கை ஒதுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற ரகளைகளில் பயணிகள் ஈடுபடாமல் தடுப்பதற்காக, குறிப்பாக விமானம் தாமதம் ஆவதற்கு காரணமான பயணிகளை தடுக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் வரைவு திட்டம் ஒன்றை வகுத்து உள்ளது.
அதன்படி ஒரு மணி நேரம் வரை விமானம் தாமதமாக பறக்கும் விதமாக பயணிகள் ரகளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்குள் இருந்தால் ரூ.10 லட்சமும், 2 மணி நேரத்துக்கு மேல் தாமதத்தை ஏற்படுத்தும் பயணிகளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தவிர ரகளையில் ஈடுபடும் பயணிகளை கட்டுப்படுத்த விமான ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏர் இந்தியா திட்டமிட்டு உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த வரைவு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கிடைத்ததும் இந்த அபராத நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.