வைக்கோல், புல் தின்பது போல் தமிழக விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி, முட்டி போட்டு நின்றபடி வைக்கோல், புல் தின்பது போல் போராட்டம் நடத்தினார்கள்.
35–வது நாளாக நீடிப்பு
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 35–வது நாளாக நீடித்தது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் நாள்தோறும் நூதனமுறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வைக்கோல் தின்பது போல் போராட்டம்
மாடுகளைப் போன்று புல் மற்றும் வைக்கோலை தின்னும் போராட்டத்தை நேற்று அவர்கள் நடத்தினார்கள். விவசாயிகள் சிலர் முட்டிப்போட்டு மாடுகளைப் போல நிற்க, அவர்களது வாயில் வைக்கோலும், புல்லும் வைக்கப்பட்டது. மற்ற விவசாயிகள் அவர்களை கயிற்றால் கட்டி மேய்ச்சலுக்கு கொண்டுசெல்வதை போன்று நின்று கொண்டிருந்தார்கள்.
பின்னர் அதே கோலத்துடன் அவர்கள் கேரள இல்லம் வரை பேரணியாக சென்றனர். அங்கு போய்ச் சேர்ந்ததும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலியை, மாடுகள் முட்டுவது போல முட்டி விவசாயிகள் பாவனை செய்தனர்.
ஆதரவு
நூதனமான இந்த போராட்டம் டெல்லி போலீசாரையும், ஜந்தர் மந்தர் பகுதிக்கு போராட்டம் நடத்துவதற்காக வந்த பிற மாநிலத்தினரையும் வெகுவாக கவர்ந்தது.
பின்னர் விவசாயிகள் கேரள இல்லத்தில் இருந்து போராட்ட களத்துக்கு திரும்பி வந்து, தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது பிற மாநில விவசாயிகள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அய்யாக்கண்ணு
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாங்கள் 24 மணிநேரமும் ரோட்டிலேயே இருந்து போராடி வருகிறோம். எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. எலிக்கறி, பாம்புக்கறி தின்பது போன்றும் புல் தின்பது போன்றும் பல்வேறு நூதன முறைகளில் போராடிவிட்டோம். இனி சாட்டையால் அடித்துக்கொள்வோம், சட்டையை கிழித்துக்கொள்வோம். அதன்பிறகும் கண்டு கொள்ளாவிட்டால் தூக்கில் தொங்க வேண்டியதுதான். வேறு வழியே இல்லை’’ என்றார்.